மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் இருந்து துவங்கியது.

Update: 2022-11-08 09:08 GMT

சோதனை ஓட்டத்தின்போது திருவள்ளூரை கடந்து சென்றது வந்தே பாரத் ரயில்.

சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திருவள்ளூரை இன்று காலை 6.35 மணியளவில் கடந்தது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சென்றதால் மக்கள் தண்டவாளத்தை கடக்காதவாறு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

பாரதப் பிரதமர் மோடியின்  கனவு திட்டங்களில் ஒன்று  வந்தே பாரத் ரயில் திட்டம் ஆகும். இந்த ரயில் சேவையை கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.  அதன் பின்னர் தமிழகத்திற்கு வந்து திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

சென்னை -பெங்களூரு -மைசூரு இடையே இயக்கப்படும் இது நமது நாட்டில்  ஐந்தாவது ரயில் சேவையாகும். இந்த ரயில் சேவையின் சோதனை ஓட்டம் சென்னையிலிருந்து மைசூர் வரை இன்று தொடங்கியது. கடந்த 2019 ம் ஆண்டு டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலின் முதல் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஐ. சி. எப்.ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த ரயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் செல்லும்போது வழக்கமாக மற்ற ரயில்களில் செல்லும் நேரத்தை விட மிக குறைந்த நேரத்தில் சென்று சேர முடியும்.

இந்த ரயிலில் 180 டிகிரி அளவுக்கு சுழலும் இருக்கை வசதி உள்ளது. 34 இன்ச் எல். சி.டி. டி.வி.யும் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஒரு மில்லி மீட்டர் முதல் 650 மில்லி மீட்டர் வரை தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் எளிதில் கடந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.‌ இந்நிலையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக இந்த ரயில் சேவையின் சோதனை ஓட்டத்தை  தென்னக ரயில்வே மேலாளர் இன்று சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இத் திட்டத்தின்படி ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு  திருவள்ளூர் அரக்கோணம் பெங்களூர் வழியாக மைசூரை சென்றடையும். இந்த ரயில் இன்று காலை 5 50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 6.35 மணிக்கு திருவள்ளூரை அதிவேகமாக கடந்து சென்றது.

160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் செல்வதால் ரயில் பயணிகள் இருப்பு பாதையை கடக்காதவாறு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மற்ற ரயில்களில் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் இந்த ரயிலை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News