பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து
பெரியபாளையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
பெரியபாளையத்தில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆந்திராவில் இருந்து வாகனங்களுக்கான ஆயில் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பெரியபாளையம் பகுதியை லாரி கடக்க முற்பட்ட போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் நொறுங்கியது. சாலை தடுப்பில் மோதி இன்ஜின் பகுதி முற்றிலும் நசுங்கிய நிலையில் கிரேன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து லாரியை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த யாதவ் லாரியை ஓட்டி வந்த நிலையில் பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் ஆங்காங்கே திடீரென சாலை மத்தியில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்கள் ஆரம்பிக்கும் பகுதிகளில் முறையாக எச்சரிக்கை பலகைகள், ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்கள் பொருத்தாமல் இருப்பதால் இரவு, அதிகாலை நேரங்களில் தடுப்பு சுவர்கள் வருவது தெரியாமல் அதிகளவில் விபத்துக்கள் நடந்து பல உயிர்கள் போவதாக, ஓட்டுநர்கள்,பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சிய போக்கு இதற்கு காரணம் எனவும் உடனடியாக சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.