கும்மிடிப்பூண்டியில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்: திருட்டு ஆசாமிக்கு வலைவீச்சு..!

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் போலீஸ் எனக்கூறி நடித்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ் செய்த திருட்டு ஆசாமியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-04 09:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா ( வயது 53). இவர், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக கும்மிடிப்பூண்டி பஜார் வீதிக்கு சென்றுள்ளார். அங்கு காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்து உள்ளார்.

அப்போது திடீரென சாதாரண உடையில் நின்றிருந்த நபர் ஒருவர், தான் போலீஸ் எனக்கூறி, விஜயாவிடன் நைசாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில்,  இப்பகுதியில் நகை கொள்ளை அடிக்கடி நடக்கிறது எனக்கூறி தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், தற்போது நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழட்டி பைக்குள் பத்திரமாக வைக்குமாறு கூறியதை நம்பி, தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி விஜயா, கைப்பையில் வைத்துள்ளார்.

எதிர்பாராமல், அந்த நபர் 6பவுன் நகைகளை பிடுங்கிக் கொண்டு ஓடி உள்ளார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்ற போது திருட்டு ஆசாமி தப்பிச் சென்று விட்டார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, விஜயா கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் காவல்துறையினர், அருகே உள்ள சி.சி.டி.வி கேமராவை வைத்து திருட்டு ஆசாமி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




Similar News