மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது

மதுரவாயலில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரே ரக 13 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-03 10:14 GMT

கைது செய்யப்பட்ட 3 பேர். 

மதுரவாயலில் ஒரே ரக இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடி சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 மொபெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசில் சிக்காமல் இருக்க திருடிய இரு சக்கர வாகனங்களை கிராமங்களில் விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த, மதுரவாயல், போரூர், அய்யப்பன் தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருவதாக மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கலை சேர்ந்த தங்கராஜ்( வயது 22), மாங்காட்டைச் சேர்ந்த ஸ்ரீநாத்( வயது 22), திருவேற்காட்டைச் சேர்ந்த தீபன்( வயது 20), ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார்  பிடித்து விசாரித்த போது மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்பு கொண்டனர்.

இவர்களிடம் இருந்து ஒரே ரக 13 மொபெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்த போது இரவு நேரங்களில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வதும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மொபெட்டின் லாக்கை உடைத்து அதனை டோக் செய்து எடுத்து செல்வது போல் திருடி சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.


குறிப்பாக சென்னையில் இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்தால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை தாண்டி உள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் மாடுகள் வைத்திருக்கும் நபர்களை பார்த்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து இவர்களிடமிருந்து 13 மொபெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News