ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
ஆவடியில் கணவன், மனைவி ஆகியோரை கொலை செய்து தப்பிச் சென்ற குற்றவாளியை போலீசார் விரைந்து பிடித்துக் கைது செய்தனர்.
ஆவடியில் இரட்டை கொலை குற்றவாளியை விரைந்து பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மிட்னமில்லியில் வசித்து வருபவர் சிவநாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா தேவி.சித்த மருத்துவரான சிவநாயர் தனது வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வருகிறார்.இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் என்பவர் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
2019ல் இருந்து சிவநாயரிடம் மகேஷ் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் சிவ நாயரிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரது வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளார். மகேஷின் நடவடிக்கை சரி இல்லாததால் சிவநாயரின் மனைவி பிரசன்னா தேவி கண்டித்துள்ளார். இதனைப் பற்றி தனது மகனிடமும் பலமுறை கூறியுள்ளார்.சம்பவ நாளன்று மகேஷ் சித்த மருத்துவரின் வீட்டிற்குள் நுழைந்து சித்த மருத்துவரின் மனைவி பிரசன்னா தேவியை கொலை செய்து விட்டு அதை தடுக்க வந்த சிவநாயரையும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த கொலைக்கான காட்சிகள் அங்குள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் மகேஷை தீவிரமாக தேடி வந்த காவல்துறை துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். குற்றவாளிைய உடனடியாக கைது செய்த காவல் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.