அம்மன் கோவில் காணிக்கை தங்கம் வங்கியில் ஒப்படைப்பு: ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் வர ஏற்பாடு

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தங்கம் வங்கியில் ஒப்படைத்ததில், தங்க முதலீட்டு பத்திரத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடி கோவிலுக்கு வருமானம் கிடைக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2022-06-30 04:30 GMT

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தங்கத்தை தங்க முதலீட்டு பத்திரத்தில் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. 

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கம் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த தங்கம் வகைப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 130கிலோ 512கிராம் தங்கத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் சுத்தமான 24கேரட் தங்கமாக உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இந்த தங்கம் முதலீட்டு திட்டத்தின் மூலம் பவானி அம்மன் ஆலயத்திற்கு ஆண்டிற்கு 1கோடி ரூபாய் வருமானம் கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: கோவில்களில் பெறப்பட்ட காணிக்கை தங்கங்களில் பயன்படுத்த முடியாத தங்கம் உருக்கி வங்கியில் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்து கிடைக்கும் பணம் கோவில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதுபோன்ற தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு பலன் அளிக்கும் நல்ல திட்டங்களை, பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்க்கிறது என்பதற்காக கைவிட முடியாது. தங்கத்தேர் செய்யும் பணிகள் புகாருக்கு இடமளிக்காத வகையில் 18மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு தங்கர்தேர் பவனி நடைபெறும்.

சிறுவாபுரி முருகன் கோவிலின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பாபிஷேகம் நவம்பர் மாதம் நடத்தப்படலாம்.  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பணிகள் 125கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரைவு திட்டம் முதலமைச்சர் ஒப்புதல் பெறப்பட்டு 3மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனை தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அப்போது அவருடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பலர் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News