ஆவண காப்பகத்தில் தகவல் தெரிவிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஆவண காப்பகத்தில் தகவல் தெரிவிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-11-07 15:50 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சி  மாவட்டத்தில், தனியார்  வசமுள்ள வாலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆவணக் காப்பகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தனியார் வசமுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பழமையான ஆவணங்களை மாவட்ட ஆவணக் காப்பகத்துக்கு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டு, அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளின் நிர்வாகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை சேகரித்து, பாதுகாக்கும் அரும் சேவையினை புரிந்து வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆவணக் காப்பகம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

நமது வரலாறு பற்றி தெரிய அடிப்படை ஆதாரமாக உள்ளவை ஆவணங்களே ஆகும். அவை அரசுத்துறை ஆவணங்கள் மற்றும் தனியார் ஆவணங்கள் எனக்கொள்ளலாம். ஆதாரப்பூர்வமாக வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள அரசுத்துறை ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதோடு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், மடங்கள், கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், மத அமைப்புகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஜமீன்தார்கள் மற்றும் சமஸ்தானங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருக்கும் புராதனமிக்க ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் தங்கள் (வாழ்வில் நடந்த) வாழ்ந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து காந்திஜி, நேரு, போன்ற முக்கிய தேசியத் தலைவர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருப்பின் அத்தலைவர்களிடமிருந்து வீரர்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றிருக்கும். இக்கடிதங்கள் பாதுகாக்கப்பட்டால் இந்திய சுதந்திரப் போர் பற்றி அறியப் பயன்படும்.

ஆங்கிலேய ஆட்சியின் போது ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேயருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கும் அப்படிப்பட்ட ஜமீன்தார்களின் சந்ததிகள் தம் மூதாதையர்கள் விட்டு சென்ற வாழ்க்கை குறிப்புகள், காலக்குறிப்புகள் மற்றும் கடிதப்போக்குவரத்துகள், அரிய புகைப்படங்கள் இந்நாட்டின் ஒரு பகுதியின் வரலாற்றை வெளிக்கொணர பேருதவியாக இருக்கும். இந்து, கிறிஸ்துவர் மற்றும் முஸ்லீம்கள் தங்கள் கோவில் பற்றிய புராணங்கள், வரலாற்றுக் குறிப்புகள் புத்தக வடிவிலோ, செப்புப் பட்டயங்களாகவோ, ஓலைச் சுவடிகளாகவோ கிடைக்கப்பெற்றால் அவை சமய வழிபாடு பற்றி அறிய பேருதவியாக இருக்கும்.

தங்களால் அனுப்பப்படும் ஆவணங்கள் விஞ்ஞான ரீதியாக செப்பனிடப்பட்டு பராமரிக்கப்பட்டு, கணினிமயமாக்குவதன் (ஸ்கேன் மற்றும் மைக்ரோ பிலிம்) மூலம் நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் அடிச்சுவடு மாறாமல் பாதுகாத்திட இயலும். மேலும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் தேசிய தனியார் ஆவணங்கள் பதிவேட்டில் பதிந்து வைக்கப்படும்.

எனவே தங்களிடம் உள்ள பழமை வாய்ந்த பயனுள்ள ஆவணங்களை ஆராய்ச்சி அலுவலர் மாவட்ட ஆவணக்காப்பகம் 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி - 01. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மேலும் - 0431-2462848 என்ற தொலைபேசி எண்ணிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News