தவறான குறுஞ்செய்தி: திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மறுப்பு அறிவிப்பு
தவறான குறுஞ்செய்தி தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மறுப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டு உள்ள ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை நீதிமன்ற உத்தரவு எண். 20559/20215ன் படி வழங்குவதாக குறிப்பிட்டு செய்தி வரப்பெற்றுள்ளது. இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள நீதிமன்ற உத்தரவில் திருச்சிராப்பள்ளி, மருங்காபுரி தாலுக்கா, அக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ சென்பக விநாயகர் கோவில் திருவிழாவிற்கான காவல் துறை பாதுகாப்பு தொடர்பானதாகும்.
பொதுமக்களுக்கு அலைபேசியில் வந்துள்ள வாட்ஸ் ஆப் செய்தியில் குறிப்பிட்டுள்ள உதவித்தொகை தொடர்பான செய்தி தவறான செய்தி ஆகும். மாநகராட்சி நிர்வாகத்தால் எந்தவித உதவித்தொகையும் வழங்குவதாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அனைவரும் உதவித்தொகை சம்பந்தமாக மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், உண்மையற்ற செய்திகளைப் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.