திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில் அடைப்பு
திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.;
போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் ஆணையும் அவரிடம் சார்வு செய்யப்பட்டது. இதற்கிடையில் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் நேற்று முன்தினம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விசாரணை முடிந்ததும் நேற்று மாலையில் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மாஜிஸ்திரேட் சரவண பாபு முன்னிலையில் சவுக்குசங்கரை போலீசார் ஆஜர் படுத்தினார்கள். அப்போது சவுக்கு சங்கர் தன்னை கோவை மத்திய சிறையில் தனி அறையில் அடைத்து உள்ளனர். என் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிரமமாக இருக்கிறது. எனவே என்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள் சட்ட உதவி மையம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறினார். மேலும் சவுக்கு சங்கரை வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் மாஜிஸ்ட்ரேட் சரவண பாபு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மாஜிஸ்டிரேட் சரவண பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அந்த மனுநீதான விசாரணையை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் சவுக்கு சங்கர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் தனது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். பின்னர் சவுக்கு சங்கர் கோர்ட்டு உத்தரவு படி லால்குடி கிளை சிறையில அடைக்கப்பட்டார்.
கோர்ட்டில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே அழைத்து வரப்பட்டபோது அவருக்கு எதிராக பெண்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.