கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஒலிம்பிக் உட்பட சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி பெற்று வீரர் வீராங்கனைகளை தயார்படுத்த திருச்சி உள்பட கால இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகே ஒலிம்பிக் அகாடமி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகளுக்கு 440 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்ததால் அதனை சுத்தம் செய்து மீட்டெடுக்க காலதாமதம் ஆகும் என்பதால் அதற்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்ய தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி திருவெறும்பூர் வட்டத்துக்கு உட்பட்ட இலந்தை பட்டியில் 4 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ததோடு அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் சிலர் கூறும்போது இடத்தை தேர்வு செய்து அறிவிப்பதற்கு முன்பாக அந்த இடத்தை ஆய்வு செய்யாமல் திடீரென அறிவிப்பு செய்யப்பட்டது. இப்போது பஞ்சப்பூர் இடம் சரியில்லை என்பதால் திருவெறும்பூருக்கு மாற்றுகிறோம் என்று கூறுவது காலதாமதத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் செயலாக கருதப்படுகிறது.
எனவே அரசும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து விரைவில் இடத்தை முடிவு செய்து அகாடமி அமைப்பதற்கான பணியை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.