திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய 3 இடங்களில் ரெய்டு

திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய ஓட்டல் உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2022-07-08 05:08 GMT

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அமைச்சராக இருந்தபோது இவர் தனது மனைவி,மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது மகன்கள் இன்பன், இனியன் உள்பட 6 பேர் மீது ரூ. 58 கோடியே 44 லட்சம் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை திருவாரூர், மன்னார்குடி, சென்னை, கோவை, திருச்சி உள்பட காமராஜு க்கு தொடர்புடைய மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.


திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பிளாசம் ஓட்டல், தில்லை நகரில் உள்ள ஒரு வீடு மற்றும் கே.கே. நகர் உழவர் சந்தை அருகில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றி சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News