திருச்சி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்று சூழல் மாணவர் மன்றம் துவக்கம்

திருச்சி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்று சூழல் மாணவர் மன்றம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-02 06:19 GMT

திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் துவக்கப்பட்டு மாணவிகள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மைத் துறை சார்பில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. தண்ணீர்அமைப்பு செயல்தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். நிகழ்வில் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி முன்னிலையில் வகித்தார்.

தண்ணீர்அமைப்பின் செயலாளர் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் "அணிநிழல் காடும் உடையது அரண்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் காடுகள் அழிப்பு என்பது இந்த நூற்றாண்டின் மனிதர்கள் உண்டாக்கும் மிகப்பெரிய இயற்கை சிதைவு ஆகும். காடழிப்பால் காலநிலை மாற்றம் இயற்கைப் பேரிடர்களை கொண்டு வருகிறது, பேரிடர் நோய்கள், பேரிடர் வெள்ளம், பேரிடர் வறட்சி, பேரிடர் சூறாவளி புயல், கடும் கனமழை, நிலச்சரிவு, ஆகியவை யாவும் மனிதர்கள் உருவாக்கும் வளங்கள் அழிப்பு, சுரண்டல் வணிக அரசியலால் உருவாகிறது.

இதனைத் தவிர்த்திட தொடர்ந்து வினையாற்றிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பெருகும் கரியமில வாயு வெளியிடும் கார்ப்பரேட் ஆலைகள் முறையாக எவ்வித சூழலியல் விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் தனி அக்கறை செலுத்த வேண்டும். தனது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதுபோல் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீர்நிலைகளை நம்பியே அனைத்து ஜீவராசிகளும் உள்ளன. எனவே நீர்நிலைகளை திறந்தவெளி குப்பைத்தொட்டியாக மாற்றிடாமல் பாதுகாத்திட அனைவரும் முன்வர வேண்டும். நீராதாரங்கள் பெருகிட மரங்களை நட்டு பாதுகாத்து வளர்த்திட வேண்டும். சுகாதாரம் காத்திட நெகிழிப்பையை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்தி சூழலையும் எதிர்காலத்தையும் காத்திட இளையோர் முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்வை மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். வித்யாலட்சுமி ஒருங்கிணைத்தார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவ உறுப்பினர்களுக்கு அமைப்பின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News