திருச்சியில் நடிகர் விவேக் நினைவு நாளில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி
நடிகர் விவேக் நினைவு நாளையொட்டி திருச்சியில் இன்று மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.;
இயற்கையை நேசித்து, தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழகத்திற்கு வித்திட்ட நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 17.04.22 மக்கள் சக்தி இயக்கம், சார்பில் பொன்மலையடிவாரம் பகுதியில் மரக்கன்றுகள் நட்டப்பட்டது.
தமிழ் சினிமாவில் இதுவரை 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ள விவேக் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர்.
மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தார். மேலும், பசுமை காதலனான நடிகர் விவேக் மரம் நடுதலை தன் வாழ் நாளில் மிகப்பெரிய பணியாகவும் மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும் விளங்கினார். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதைப் பராமரிக்கவும் செய்திருக்கிறார்.