இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் – போலீசார் தடுத்து 6 பேரை கைது செய்தனர்..!

இலங்கைக்கு கடத்த இருந்த ஒன்றரை டன் மஞ்சள் படகு மற்றும் லோடு வேன் பறிமுதல் : 6 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-10 05:16 GMT

இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று அதிகாலை திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக ஒரு லோடு வேன் நின்று கொண்டிருந்தது.

மேலும் கடலில் நின்ற படகில் விராலி மஞ்சள் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. லோடு ஆட்டோவில் இருந்து மஞ்சள் மூட்டைகளை மர்ம நபர்கள் படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒன்றரை டன் மஞ்சளை கியூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.26 லட்சத்து 25 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட 6 மீனவர்களையும் கைது செய்து அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு மற்றும் லோடு வேனையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News