துப்பாக்கி சூடு விசாரணை முறையாக நடக்கவில்லை-ஸ்டாலின்

Update: 2021-03-22 10:45 GMT

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கீதாஜீவன், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக காந்திய வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழக அரசு. மத்திய பாஜக அரசும் தமிழக அரசும் இணைந்து திட்டமிட்டு தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பதவியில் நீடிக்கலாமா?.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை பிஜேபி அரசு சிபிஐயை முடக்கி வைத்துள்ளது.இந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகனை இந்த அரசு அடித்து கொலை செய்துள்ளது. ஆனால் முதல்வர் பழனிசாமி போலீசார் தாக்கியதில் அவர்கள் உயிரிழக்கவில்லை அவர்களுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்தது என்று தெரிவிக்கிறார்.

மேலும், கோவில்பட்டி தொகுதியில் இருக்கக்கூடிய அமைச்சர் இந்த மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா ?. தினமும் பேட்டி மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடம்பூர் ராஜூ தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இதுவரை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவில்லை. ஆனால் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியை போன்று புதிதாக ஒரு ஊரை உருவாக்கும் அளவிற்கு பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளார் என்ற அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் தேசிய மீனவர் ஆணையம் அமைத்திட திமுக நடவடிக்கை எடுக்கும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News