நீட் தேர்விற்காக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம்?

நீட் தேர்விற்காக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-04-24 16:52 GMT

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ மாணவிகள் (கோப்பு படம்)

தமிழகத்தில் நீட் தேர்வின் காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் டூ அரசு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ம்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7600 பள்ளிகளில் பயிலும் மொத்தம் சுமார் எட்டரை லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதினார்கள்.

இந்த ஆண்டு முதல் நாள் நடைபெற்ற தமிழ் மொழித்தேர்வில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆனது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதே போல் தொடர்ந்து மற்ற பாட தேர்வுகளிலும் ஆப்சென்ட் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது.

பிளஸ்  டூ தேர்வு முடிந்த பின்னர் அவை விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. ஆசிரியர்கள் தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மே மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக கல்வி துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுருந்தது. இந்நிலையில் தற்போது மே 7 ஆம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக தற்போது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News