ஈரோடு மாவட்டத்தில் கடன் பெற சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.;

Update: 2024-11-28 12:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் கடன் மேளா (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர்கான சிறப்பு முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் டிச.7ம் தேதியும், கோபி கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் டிச.11ம் தேதியும், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமையகம், அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, பவானி, சென்னிமலை, சம்பத்நகர், கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பு.புளியம்பட்டி, சத்தியமங்கலம், சிவகிரி, டி.என்.பாளையம், பெருந்துறை, அறச்சலூர், அவல்பூந்துறை, காஞ்சிக்கோவில், குருமந்தூர், ஈரோடு பஜார் கிளை, சோலார், சூரம்பட்டி வலசு, மாணிக்கம்பாளையம், டி.ஜி.புதூர் மற்றும் சித்தோடு ஆகிய கிளைகளில் டிச.11 மற்றும் டிச.12ம் தேதியும் நடைபெற உள்ளது.

ஈரோடு கூட்டுறவு நகர வங்கி முனிசிபல் காலனி கிளை, சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகம் மற்றும் சத்தியமங்கலம் கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் டிச.13ம் தேதியும், பவானி கூடல் கூட்டுறவு நகர வங்கி தலைமையகத்தில் டிச.20ம் தேதியும், சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியின் பெருந்துறை கிளையில் டிச.21ம் தேதியும் லோன் மேளாக்கள் நடைபெறவுள்ளது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் அனைவரும் மேற்படி, சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனவே, கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் மனுக்களுடன் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424 2260155 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகலோ தொடர்பு கொள்ளலாம். எனவே இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ பால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News