கோபி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது
கோபியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த ஒருவரை கைது செய்த போலீசார், மற்றோருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
கோபியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த ஒருவரை கைது செய்த போலீசார், மற்றோருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.
இந்நிலையில், கோபி ஜெய்துர்கா நகரை சேர்ந்த சாமியப்பன் என்பவர் வெள்ளியங்கிரியிடம் உனது மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சாமியப்பன் கோபி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து, ரூ.20 லட்சம் பணத்தை சாமியப்பன் வெள்ளியங்கிரியிடம் கேட்டுள்ளார். பின்னர் வேலை கிடைத்தால் போதும் என நம்பி வெள்ளியங்கிரி முதல் தவணையாக சாமியப்பனிடம் ரூ.1 லட்சமும், அவரது நண்பரான சென்னையை சேர்ந்த மகேந்திரராஜாவின் வங்கி கணக்கில் ரூ.19 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.
பணத்தை பெற்று கொண்ட சாமியப்பள் மற்றும் மகேந்திரராஜா இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இந்நிலையில் வெள்ளியங்கிரி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு இருவரும் பணத்தை தரமுடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வெள்ளியங்கிரி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியப்பனை கைது செய்தனர். மேலும், தலைமறைவான மகேந்திரராஜாவை தேடி வருகின்றனர்.