செயற்கை மணல் உற்பத்தியை தமிழக அரசே மேற்கொள்ள மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை
தமிழகத்தில் செயற்கை மணல் விற்பனையை அரசே மேற்கொள்ள வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் செயற்கை மணல் விற்பனையை அரசே மேற்கொள்ள வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர், நாமக்கல் செல்லராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
தமிழகம் முழுவதும் சுமார் 450 கிரசர்களுக்கு எம்,சேண்ட் மற்றும் பி.சேண்ட் என்னும் செயற்கை மணல் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்ட கிரசர்கள் அனுமதி பெறாமல், தரமற்ற கற்களை அரைத்து எம்.சேண்ட், பி.சேண்ட்என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆற்று மணல் கிடைக்காத காரணத்தால் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவோர் அதை வாங்கி கட்டும்போது கட்டிடங்கள் உறுதித் தன்மையில்லாமல் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட 35 மீட்டர் ஆழத்திற்கு மேல் சுமார் 300 மீட்டர் ஆழம் வரை விதிமுறைகளுக்கு புறம்பாக கற்களை வெட்டி எடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். விதிமுறைகளை மீறி முறைகேடாக நடைபெறும் கல்குவாரி கிரசர்கள் மீதும், அனுமதி பெறாமல் நடைபெறும் கல்குவாரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடந்த 12.9.2023 அன்று தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல்குவாரிகளில் முறைகேடாக அனுமதித்த அளவுக்கு மேல் மணல் அள்ளி விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர். அதன்பிறகு மணல் குவாரிகள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மணல்குவாரி இயங்காத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, எம்.சேண்ட், பி.சேண்ட் மற்றும் ஜல்லி விலையை உயர்த்தி அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 25.11.2024 அன்று கரூரில் நடைபெற்ற கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 1.12.2024 முதல் எம்.சேண்ட், பி.சேண்ட் மற்றும் ஜல்லி விலையை ஒரு யூனிட்டிற்கு ரூ. 1200 வரை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் கட்டிடம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த விலை உயர்வு அறிவிப்பை மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டிக்கிறது.
மேலும், தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு, விலை உயர்வைத் திரும்ப பெறச்செய்ய வேண்டும். மேலும், கல்குவாரி கிரசர்களில் உற்பத்தி செய்யப்படும் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி போன்ற கனிமங்களை தமிழக அரசு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து, தரமான முறையில், அரசே உற்பத்தி செய்து கு¬றைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.