வால்டர் தேவாரம் நடத்திய முதல் துப்பாக்கி சூடு- ஏன், எதற்காக? பகுதி- 3

வால்டர் தேவாரம் நடத்திய முதல் துப்பாக்கி சூடு ஏன், எதற்காக? நடத்தப்பட்டது என்பதை இன்றைய பகுதி- 3 ல் பார்க்கலாம்.

Update: 2022-11-21 15:27 GMT

வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ்.

தமிழக காவல்துறையில் டி‌.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். தேவாரம் வருகிறார் என்றால் கலவரக்காரர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், ரவுடிகளுக்கும் கிலி ஏற்படும் அந்த அளவிற்கு அவர் ஒரு டெரர் ஆபீஸராக தனது பதவி காலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்கள் நமது 'இன்ஸ்டா நியூஸ்' இணைய செய்தி தளத்தில் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டில் அவரது பள்ளி பருவம், கல்லூரி வாழ்க்கை ராணுவ பணி, இந்திய- சீன யுத்தத்தில் அவரது பங்களிப்பு பற்றி பார்த்தோம். ராணுவ பணியை உதறி தள்ளிவிட்டு தமிழக காவல்துறை பணியில் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களையும் நேற்று பதிவிட்டு இருந்தோம்.

நீலகிரி மாவட்ட எஸ்.பி.

தமிழக காவல்துறையில் அவர் முதன் முதலாக போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இடம் நீலகிரி மாவட்டம். ஊட்டியில் அவர் காவல்துறை அதிகாரியாக இருந்த போது தான் முதல் முறையாக ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. அது பற்றி இன்றைய பதிவில் காணலாம். இந்த துப்பாக்கி சூடு எதற்காக நடத்தப்பட்டது என்பதற்கான காரணத்தையும் அவரே விவரித்து இருக்கிறார். அவர் ஏற்கனவே தெரிவித்தபடி நீலகிரி மாவட்டம் ஒரு அமைதியான மாவட்டம். மிகச்சிறந்த சுற்றுலா தலம் என்பதால் இங்கு பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் முக்கிய பிரமுகர்களும் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அவர்களுக்கு பந்தோபஸ்து, காவல் பணி என காவல்துறைக்கு அந்த பணியே முக்கிய வேலையாக இருக்கும். மற்றபடி பெரிய அளவில் மத கலவரம் போன்ற சம்பவங்கள் நடைபெறாத ஒரு இடம் என்று கூட சொல்லலாம்.

காவல் நிலையம் முற்றுகை

அத்தகைய பின்புலத்தைக்கொண்ட நீலகிரி மாவட்டத்தில் தான் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ்.-ன் முதல் காவல் கண்காணிப்பாளர் பணி தொடங்கியது. அவர் அங்கு பணியில் சேர்ந்த இரண்டு மாதத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம். அங்கு உள்ளூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் ஏதோ ஒரு பிரச்னை. இந்த பிரச்னை முற்றி அந்த பகுதியைச்  சேர்ந்த சுமார் 500 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சாலையில் அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால்  ஊட்டி -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வந்தார் தேவாரம்


இது பற்றிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் வால்டர் தேவாரத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வருகிறார். பிரச்சனைக்கு காரணமான சப்- இன்ஸ்பெக்டரை அழைத்து என்ன நடந்தது என விசாரணை நடத்தினார். பின்னர் அதற்காக வருத்தம் தெரிவிக்கும்படி அவரை கேட்டுக் கொண்டார். வருத்தம் தெரிவித்த பின்னரும் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக போராடிக் கொண்டிருந்தார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

அந்த காலகட்டத்தில் காவல்துறை பெரிய அளவில் போலீசார் எண்ணிக்கை கிடையாது. ஒரு போலீஸ் சூப்பிரண்டு ஒரு டி எஸ் பி, என்ற அளவில் தான் அதிகாரிகள் இருந்தார்கள். ஆதலால் தேவாரம் உடனடியாக ஆயுதப்படை போலீசார் சிலரை வரவழைத்தார். அவர்கள் வந்த பின்னரும் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. போராட்டம் நடத்தியவர்களுடன் தேவாரம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது இந்தப் போராட்டத்தால் நாகப்பட்டினம்- ஊட்டி- மங்களூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் .ஆதலால் போராட்டத்தை கைவிடுங்கள். பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார் .ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

முதல் துப்பாக்கி சூடு

போராட்டம் நேரம் ஆக, ஆக  தீவிரமாகிக் கொண்டே இருந்தது. காவல் நிலையம் மீது அவர்கள் கல்வி வீசி தாக்கினார்கள். இந்த நேரத்தில் போலீஸ் நிலையம் முன்பாக வால்டர் தேவாரம் வந்த ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஜீப்பிற்கு கலவரக்காரர்களில் ஒருவர் தீ வைத்து விட்டதாக கான்ஸ்டபிள் ஒருவர் வந்து தேவாரத்திடம் கூறினார். நிலைமை மோசமாகிக் கொண்டிருந்ததை உணர்ந்த தேவாரம் நிலைமையை சமாளிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினால் தான் முடியும் என கருதினார். காரணம் காவல் நிலையம் அருகிலேயே அரவங்காடு ஆயுத தொழிற்சாலை உள்ளது. வெடி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை அது. பிரச்னை பெரிதாகி தொழிற்சாலைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடக்கூடாது என கருதிய அவர் வேறு வழியில்லாமல் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தி நிலைமையை சீராக்க துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருவர் பலி

ஒரே ரவுண்டு தான் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினார்கள். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்தும் நெரிசலின் சிக்கியும் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நீதி விசாரணை

தீவிரவாதிகளுக்கு எதிராக நக்சலைட்களுக்கு எதிராக எத்தனையோ சம்பவங்களில் துப்பாக்கியால் சுட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய வால்டர் தேவாரம் நடத்திய முதல் துப்பாக்கி சூடு சம்பவம் இதுதான். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக கோவையில் உள்ள டி.ஐ.ஜி. செனாய்க்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நேரடி விசாரணை நடத்தியதாக தேவாரம் குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பின்னர் வருவாய்த்துறை சார்பில் நீதி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தனக்கு சாதகமாகவே முடிவு வந்ததாகவும் தேவாரம் குறிப்பிட்டு இருக்கிறார்.

தஞ்சாவூருக்கு மாற்றம்

நீலகிரியில் வால்டர் தேவாரம் 2 ஆண்டுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து அவர் பணி மாற்றம் செய்யப்பட்ட இடம் தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பதை நாளை பார்க்கலாம் (இன்னும் வரும்)

Tags:    

Similar News