கோவை பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
கோவை பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் ரிஷி பிரியன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவரது மகன் ரிஷி பிரியன் (வயது17). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் முதலாமாண்டு நெட் ஓர்க் ஆட்டோமொபைல் அப்ளிகேசன் பிரிவில் இஞ்சினீயரிங் படித்து வந்தார். இவர் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாணவர் ரிஷி பிரியன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் , உடலை மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாணவன் ரிஷி பிரியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.