பனை ஏறுவதற்கு இயந்திரம் கண்டு பிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் விருது

பனை ஏறுவதற்கு இயந்திரம் கண்டு பிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2023-07-07 15:43 GMT
பனை மரங்கள் (கோப்பு படம்)

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் மாநில அளவில் சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது ரூ.1 இலட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரம் தமிழகத்தின் பூர்வீக மரம். பனை மரத்தின் அடிப்பாகம் முதல் அதன் உச்சி வரை அனைத்துமே பயனுள்ள பகுதிகள் தான். ஆனால் இத்தகைய பனை மரத்தில் ஏறுவதற்கு மரம் ஏறும் தொழிலாளர்கள் இல்லை. அது ஒரு ஆபத்தான தொழில் என கருதி பனை ஏறுவதற்கு யாரும் முன்வருவது இல்லை.

எனவே எவ்வித ஆபத்துமின்றி இலகுவாக ஏறுவதற்காகவும் பனை நுங்கு மற்றும் பிறபொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும், கருவிகளை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பேராசிரியர் (TNAU) வேளாண் பொறியியல் பேராசிரியர் (TNAU). தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்) – தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த குழு மூலமாக சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர் தேர்வு செய்யப்பட்டு. பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவு விலையின் உண்மைத்தன்மை, இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் ஒட்டு மொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானவர் மேற்கண்ட குழுவால் முடிவு செய்யப்படும்.

மேலும் பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள் இக்குழுவின் முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News