பாரம்பரியமிக்க அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கம்

இராமநாதபுரத்தில் பாரம்பரியமிக்க அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

Update: 2021-06-11 12:18 GMT

இராமநாதபுரத்தில் பாரம்பரியமிக்க அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்புகளை அதிகரித்திடும் நோக்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக 429 ஊராட்சிகளில் '1000 குறுங்காடுகள்" வளர்க்கும் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுடன், ஊட்டச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் வழங்கிடும் நோக்கில் பள்ளி வளாகங்களில் காய்கறி மற்றும் கீரை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 கிச்சன் கார்டன் அமைக்கும் பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு தற்போது அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ள அரியவகை மரக்கன்றுகளை மீட்கும் நோக்கில் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக மரக்கன்றுகள் சரணாலயம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். குறிப்பாக, மஞ்சள் கடம்பு, பரம்பை, குமிழ், மலை அரளி, இச்சி மரம், நாட்டு அத்தி, நறு உளி, பதிமுகம், பன்னீர், இலுப்பை, கருவாகை, கள்ளி மந்தாரை, வெண் மந்தாரை, ருட்ராட்சம், பூ மருது, நீர் மருது, மகிழம்பு, புங்கன், புன்னை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், நமது பாரம்பரிய மரக்கன்று வகைகளை சரியான முறையில் பராமரித்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவது நமது கடமை எனவும், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் மரக்கன்றுகள் பராமரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் வளர்ப்பில் ஊக்கப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, கூடுதல் ஆட்சியா பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், சார் ஆட்சியர் டாக்டர்.சுகபுத்ரா, உட்பட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News