ஓபிஎஸ் காரில் பறக்கும் படை சோதனை: பர்சை திறந்து காட்டிய பரிதாப நிலை

ஓபிஎஸ் காரில் பறக்கும் படை சோதனை நடத்தியது. அவர் பர்சை திறந்து காட்டும் அளவிற்கு நிலைமை பரிதாபமாக போய் உள்ளது.

Update: 2024-04-04 09:01 GMT

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஓபிஎஸ் தனது பர்ஸை திறந்து அதிகாரிகளிடம் காட்டும் அளவிற்கு நிலைமை இருந்தது.

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சுயேட்சையாக களமிறங்கி உள்ள ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார் ஓபிஎஸ்.

அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அவர் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அதிமுக தரப்பும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக, இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இதனால், அதிமுக வாக்குகளை ஓபிஎஸ் பெறுவதில் பெரிய சிக்கல் உள்ளது. இதுபோக, பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் பல அப்பாவிகளை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்தி எடப்பாடி பழனிசாமி சதி செய்துள்ளதாகவும், எத்தனை பேர் ஓபிஎஸ் பெயரில் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்றும் வெற்றி எங்களுக்குத்தான் என்றும் கூறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

இப்படியாக தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறுவதற்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஓ.பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டு அவரை திணறச் செய்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனம் மற்றும் பரப்புரை வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அவரது காரில் வைத்திருந்த பர்ஸை திறந்து காட்டுமாறு கூறிய அதிகாரிகள், அதில் அதிகளவில் பணம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் காருக்குள்ளும் சோதனை நடத்தப்பட்டது. அதில் பணம், பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் பின்னர் ஓபிஎஸ் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஓபிஎஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 முறை தமிழக முதல்வராக இருந்த  ஓ பன்னீர்செல்வத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியின் மறைமுக திட்டப்படி போலீசார் இப்படி நடந்து கொள்வதாக ஓபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறத.

Tags:    

Similar News