பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி

நாடு முழுதும் இன்று வரை பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2023-04-14 06:30 GMT
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தி புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினர்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1944 -இல் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் நேரிட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் 66 பேர் எதிர்பாராத விதமாக அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். அந்த நாளை நீத்தார் நினைவு நாளாக ஆண்டு தோறும் தீயணைப்புத் துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேலும் நாடு முழுதும் இன்று வரை தீயணைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து இதே நாளில் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், அங்குள்ள தியாகிகள் நினைவுத் தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.பானுபிரியா தலைமையில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ப.கார்த்திகேயன் மற்றும் நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போல மாவட்டம் முழுதும் உள்ள 12 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தடுப்புக்குழுவினர் சார்பில் பணியின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News