டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள்: ஜூலை 24 -ல் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல்

அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொகுதி 4 தேர்வுகள் வரும் 24 -ம் முற்பகலில் மட்டும் நடைபெறுமென அறிவித்துள்ளார்

Update: 2022-07-21 07:00 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி - IV பதவிகளுக்கான தேர்வு 24.07.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி - IV பதவிகளுக்கான தேர்வு எதிர் வரும் 24.07.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 186 மையங்களில், மொத்தம் 47679 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

மேற்கண்ட தேர்வாளர்கள் தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம், மின்வசதி மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா பேருந்து நிலையத்திலிருந்து தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 25 பறக்கும்படை குழுக்கள் (Flying Squad) மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல 59 நடமாடும் குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் நிலையில் (Monitoring Officer) கண்காணிப்பு அலுவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் கைப்பேசி (Mobile Phone), கணிப்பான்கள் (Calculator) மற்றும் மின்னணு கடிகாரம் (Electronic Watch) போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும், தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தேர்வாளர்கள் அனைவரும் தேர்வு கூடத்திற்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News