பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை: சிஇஓ தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 98% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

Update: 2021-08-30 06:54 GMT

புதுக்கோட்டை காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தூய்மை பணிகளை பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  ஆலோசனைக் கூட்டத்தின்  ஒருமித்த கருத்தின்படி  செப்டம்பர் 1ம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் அனைத்து கல்லூரிகளும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தற்போது தூய்மைப் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற தூய்மை பணிகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

அப்பொழுது  அவர் மேலும் கூறியதாவது:  செப்டம்பர்  ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் பொழுது, பள்ளிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும்.  கிருமிநாசினி மருந்து மூலம்  கைகளை சுத்தம்  செய்தபிறகே   பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். அதே போல் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து முறையாக தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளை கடைபிடித்து செயல்படவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 98 சதவீதம் வரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இன்று நடைபெறும் முகாம்களில் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு விடுவார்கள். எனவே வருகின்ற  புதன் கிழமை   கொரோனா தொற்று தடுப்பு  வழிகாட்டி நெறிமுறைகளை,  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முறையாக  பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


Tags:    

Similar News