சாந்தநாத சுவாமிகோயிலில் மாசி மகத்தையொட்டி தெப்ப உற்சவம்

Update: 2023-03-07 01:15 GMT

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவம்

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமிகோவிலில் மாசி மகத்தையொட்டி தெப்ப உற்சவம்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புதுக்கோட்டை தெப்ப உற்சவம் மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

முற்காலத்தில் குலோத்துங்க சோழீச்சரம் என்றழைக்கப்பட்டஇத்திருக்கோயில் பின்னர் சாந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்று அழைக்கப்பட்டு.தற்போது சாந்தநாதசுவாமி திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. தன்னைச் சார்ந்த வர்களைக் காக்கும் கடவுளாகவே மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

நகரின் மத்தியில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில் கிபி.1071-1123 -வரை அரசாண்ட முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டது. சாந்தநாதசுவாமி சந்நிதி அதிஷ்டானத்தில் உள்ள கல்வெட்டு இக்கோயிலை குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடுகிறது. புதுக்கோட்டை நகரில் கிழக்கு ராஜவீதியிலிருந்து கோயிலுக்குச் செல்ல அலங்கார நுழைவு வாயில் அனைவரையும் வரவேற்கிறது. கோயில் வெளிமண்டபம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது.ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம் மண்டபம்,பலிபீடம், நந்திகேசரும் அமையப்பெற்றுள்ளன.

அருள்மிகு சாந்தநாதர் குடிகொண்டிருக்கும் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் கிழக்கு நோக்கி அமையப் பெற்றும், நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கிதன்னை நாடி வரும்பக்தர்களுக்குத்தாயைப் போல் அருள்பாலிக்கும்,கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளிக்கும் அருள்மிகு வேதநாயகி அம்பாளின் கர்ப்பக கிரகமும்,அர்த்த மண்டபமும் தெற்குநோக்கி அமையப்பெற்றும் இரண்டு சந்நினதிகளுக்கும் முன்பாக மகா மண்டபமும்,தனித் தனியே நந்திகேசருடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், சுவாமி, அம்பாள் விமானங்கள் மிக அற்புதமான கலை அம்சங்களுடன் சிற்பங்களுடனும், ஆகம விதிகளின்படி முறையே மூன்று தளம், இருதளம் ஆகியவற்றுடன் அமையப் பெற்று பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த  இந்த ஆலயத்தில் மாசிமகத்தை முன்னிட்டு சுவாமிக்கு  காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் தெப்ப உற்சவம் பல்லவன் குளத்தில் நடைபெற்றது. இதில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா வந்தது. இதனை காண பல்லவன் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தெப்பம் வலம் வரும்போது பக்தர்கள் சிவ, சிவா... என பக்தி கோஷமிட்டனர். தெப்பம் கரையை வந்தடைந்ததும் சாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .

சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாத சுவாமி, வேதநாயகி அம்பாள் எழுந்தருளினர். கீழ ராஜ வீதி உள்பட நான்கு வீதிகளிலும் சாமி வீதி உலா வந்து கோயிலை மீண்டும் வந்தடைந்தது. பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். மாசி மகத்தையொட்டி சுவாமி  தரிசனம் செய்ய  கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், திருவேங்கைவாசல் சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News