விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதம்

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதத்திற்கு பின் தற்போது தொடங்கியுள்ளது

Update: 2021-05-02 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்டார். திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டார். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்குத் தொடங்கியது.

முதல் சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த எண்ணும் ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. அந்தப் பெட்டி திறந்து எண்ணப்பட்டதுடன் விவிபாட் இயந்திரமும் எண்ணப்பட்டு சரி பார்க்கப்பட்டது.

அதன்பிறகு 2ஆம் சுற்றுக்கான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அதிலும் இயந்திரத்தில் இருந்த எண் மாறுபட்டது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்ட எண்கள் மாறுபட்டே வருவதைக் கண்ட திமுக வேட்பாளர் மற்றும் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரிக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

தற்போது 4 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் 18,235 வாக்குகளையும், திமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் 12,060 வாக்குகளையும் பெற்றனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News