மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்: 67 பேருக்கு நலத்திட்ட உதவி

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 67 பயனாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை ஆட்சியர் வழங்கினர்

Update: 2022-12-22 14:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 67 பயனாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் அரசாணை (பல்வகை) எண்.300, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நாள்.21.08.2018-ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு மாதமும் வருவாய்க் கோட்டாட்சியராலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்களாலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வருவாய் நிருவாக ஆணையராலும் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துறைச் சார்ந்த அலுவலர்களால் உரிய தீர்வுகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவராலி அறிவுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 15 பயனாளிகளுக்கு ரூ.1,50,000 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக 52 பயனாளிகளுக்கு ரூ.7,02,000 மதிப்பில் நவீன செயற்கை கால், ஊன்றுகோல், கைதாங்கி, முழங்கைதாங்கி, காலிபர், கற்றல் உபகரணங்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கைபேசி, சிறப்பு உபகரணங்கள் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முடநீக்கியியல் வல்லுநர் ச.ஜெகன் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்...

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கான இயக்குநரகம் மாற்றுத்திறனாளிகளின் நலனை பிரத்தியேகமாக நிர்வகிப்பதற்காக 1992 இல் சமூக நலத்துறையை பிரிப்பதன் மூலம் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1995 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகமாக இயக்குநரகம் மேம்படுத்தப்பட்டது.

தேவைப்படுபவர்களுக்கும் தகுதியுள்ள கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் எளிதான நடமாட்டத்திற்காக காலிபர்கள் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப உபகரணங்களை பொருத்துவதற்கு, காலிபர்களுக்கான அளவீடு ஆர்த்தோடிக் மூலம் எடுக்கப்படுகின்றன மாவட்டத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களால் தேவைக்கேற்ப உபகரணங்கள் புனையப்பட்டு வழங்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் எளிதான நடமாட்டத்திற்காக மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்படுகின்றன.அடையாளம் காணப்பட்ட மற்றும் தகுதியான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணை நபர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் மற்றும் தகுதியான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்படுகிறது.

குறைந்த பார்வை கொண்ட மாணவர்களுக்கு தேவைப்படும் புத்தகங்களைப் படிக்க ஏதுவாக உருப்பெருக்கிகள் விநியோகிக்கப்படுகின்றன.பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் வேலை இடத்தை அடைய ஏதுவாக பிரெய்லி கடிகாரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க ஏதுவாக கண்ணாடி விநியோகிக்கப்படுகிறது.

Tags:    

Similar News