புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு

ஆலங்குடி வட்டம், வல்லநாடு கண்மாயில் உபரி நீர் வாய்க்கால், மிரட்டுநிலை கண்மாய் வரத்து வாரி வாய்க்கால் பகுதியை ஆய்வு செய்தார்

Update: 2022-05-11 05:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வல்லநாடு கண்மாயில் உபரி நீர் வாய்க்கால் மற்றும் மிரட்டுநிலை கண்மாய் வரத்து வாரி வாய்க்கால் ஆகியவற்றை பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில், தூர்வாரும் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்  கூறியதாவது;  தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ், பாசன அமைப்புக்கள், ஆதாரங்களை தூர்வாரி பாசன பகுதிகளை மேம்படுத்தவும், கடை மடை வரை நீர் தங்குதடையின்றி செல்லவும் திருச்சி மண்டலத்தின் கீழ், 549 பணிகளின் மூலம் 4294.94 கி.மீ நீளம் வரை பணி மேற்கொள்ள ரூ.71.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் நீர்வளத்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலகோட்டத்திற்குட்பட்ட 15 வரத்துவாரிகள் மற்றும் கல்லனை கால்வாய் கோட்டத்திற்குட்பட்ட 5 வரத்துவாரிகளையும் சேர்த்து 41.73 கி.மீ நீளம் வரை தூர்வார ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளின் மூலம் திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட சுமார் 3856.65 ஹெக்டேர் பாசன பரப்பு பயன்பெறும்.

அதன்படி திருமயம் வட்டத்திற்குட்பட்ட மிரட்டுநிலை கண்மாய் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 5.00 கி.மீ நீளம் வரை வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மற்றும் ஆலங்குடி வட்டத்திற்குட்பட்ட வல்லநாடு கண்மாயில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ. நீளமுள்ள வல்லநாடு கண்மாயில் உபரிநீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மேற்படி பணிகளை மழை காலத்திற்கு முன்பாகவும், கல்லனை கால்வாயின் பணிகளை மேட்டூர் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவும் மேற்கொண்டு வரத்துவாரிகள் மற்றும் ஆற்று கால்வாய் பகுதிகளை தூர்வாரி பாசனப்பரப்பு பயன்பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்  ஆட்சித்தலைவர்  கவிதா ராமு..

 ஆய்வின் போது செயற்பொறியாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, உதவிப் பொறியாளர்கள் லதா, உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News