இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கைஎடுக்க வேண்டுமென இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Update: 2021-08-24 10:26 GMT

கர்ப்பிணி ராணியின் உயிரிழப்புக்குகாரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரன்- வீராயி தம்பதியின் இரண்டாவது மகள் ராணி(25). இவருக்கும் நெசவுத்தொழிலாளியான முத்துக்குமார்(27) என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண்,ஆ ண் குழந்தையும் உள்ளது. கடந்த 2018 -ஆம் ஆண்டு ராணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யபட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் ராணி கைகுறிச்சியில் தனது தாய்வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி ராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ராணியின் உடலை பரிசோதனை செய்தபோது ராணி கருவுற்றிருப்பது மருத்துவர்களுக்குத் தெரியவந்தது. இந்த இருக்கும் சிக்கல் காரணமாக ராணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, நேற்று காலையில் ராணிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக ராணி மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.ராணியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணம் எனவும், அவர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மரணமடைந்த ராணியின் தங்கை தங்கால் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி, இன்று  புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்தத நகர காவல் ஆய்வாளர் குருநாதன், கணேஷ் நகர் ஆய்வாளர் ஜாபர் தலைமையிலான போலீசார், உயிரிழந்த ராணியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் ராணி உயிரிழப்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  உறவினர்கள் மற்றும் இந்திய மாதர் சங்க நிர்வாகிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags:    

Similar News