10 ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்

வணிக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்

Update: 2022-11-29 07:15 GMT

பைல் படம்

10 ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க மறுத்து   பொதுமக்கள் அவதிப்படவைத்துள்ளதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வணிக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், செயலாளர் ஏ.குமாரவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய நாடு முழுவதும் 2011ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் இந்திய அரசால் சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் 2016-ஆம் ஆண்டு செல்லாது என சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியின் காரணமாக சில வர்த்தக நண்பர்கள் 10 ரூபாய் நாணயங்களை முற்றிலுமாக வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த வதந்தியின் காரணமாக 2017 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் தற்போதும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாதது போன்ற நிலைதான் நீடிக்கிறது. சில நாட்களுக்கு முன்புகூட தமிழக அரசு 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் கூட குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை பெட்ரோல் நிரப்பிவிட்டு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்துள்ளார். அப்போது பெட்ரோல் நிலையத்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவிட்டனர். பின்னர் சங்கத்தின் சார்பில் பிரச்னையைக் கிளப்பிய பின்னர்தான், அதை வாங்கியுள்ளனர்.  எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆடசியர் தலையிட்டு பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்துத் துறையினர், வங்கி நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் பத்து ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் இருக்கச்செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் ,சமூகம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நாணயங்களுக்கு பல்வேறு டிசைன்களும் வடிவங்களும் அளிக்கப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் பல்வேறு டிசைன் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பானது. சில நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களை நினைவூட்டும்  வகையிலும் நாணயங்கள் வடிவமைக்கப்படும் அவையாவும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்திற்கு விடப்படுபவையே. 

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத்தொடங்கியது. இந்நிலையில்  பத்து ரூபாய் நாணயத்தின் மீதான மக்களின் நம்பகத்தன்மை இது நாள் வரை கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

Tags:    

Similar News