டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு

வழக்கில் ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-09-28 13:03 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 25 -12- 2019 அன்று இலங்கைக்கு படகில் 80 கிலோ போதைப் பொருள் கடத்தப்படவிருந்ததை ராமநாதபுரம் போதை பொருள் ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக அப்போது பணியாற்றி ரகுபதி தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தியதோடு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர்

புதுக்கோட்டையில் தான் புதுக்கோட்டை, ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான  அத்தியாவசிய பொருட்கள் குற்ற வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டு உள்ளதால் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 11 குற்றவாளிகளையும் டி.எஸ்.பி. ரகுபதி ஆஜர்படுத்தி வழக்கு நடந்து வருகிறது..

பதினோரு குற்றவாளிகளில் நான்காவது குற்றவாளி தனக்கு ஜாமீன் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை கிளை ஜாமீன் வழங்க மறுத்ததோடு வழக்கை விரைவாக முடிக்க புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை விரைவாக தற்போது நடைபெற்று வருகிறது.தற்போது டி.எஸ்.பி ரகுபதி திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு டி.எஸ்.பி. ரகுபதிஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு டி.எஸ்.பி. ரகுபதி ஆஜராகவில்லை.  இதனால் டி.எஸ்.பி.  ரகுபதிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News