புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-15 07:34 GMT

மத்திய அரசை கண்டித்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட குழு சார்பில் 100 நாள் வேலைத்தளத்தில் காலை 7 மணிக்கு வருகை பதிவேடு பதிவை திருத்தம் செய்து காலை 9 மணிக்கு வேலை பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இராசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணி, நாகராஜன், முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு முருகானந்தம் துவக்க உரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுந்தரராசன் நிறைவுரை ஆற்றினார். இதில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 100 நாள் வேலையை ஆண்டுக்கு 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். அரசு அறிவித்தபடி 100 நாட்கள் வேலை சட்ட கூலியும் 273 ரூபாய் குறைக்காமல் வழங்கிட வேண்டும். குடும்பத்துக்கு 100 நாள் வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தினசரி நாளொன்றுக்கு 600 ரூபாய் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான நிதியை 2.5 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும்.

வீடில்லாத நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 400 சதுர அடியில் 6 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படைக் கட்டமைப்பில் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் குரங்கு முகமூடி அணிந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News