ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு பயிற்சி

இப்பயிற்சியில் சம்மட்டிவிடுதி சார்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்

Update: 2022-11-30 14:00 GMT

பைல் படம்

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகள் பற்றிய விவசாயிகள் பயிற்சி

புதுக்கோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகள் மாவட்டத் திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி சம்மட்டிவிடுதி கிராமத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி  துவக்கி வைத்தார்.

வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பொன்செல்வகுமாரி  பங்கேற்று, நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளான குருத்துபூச்சி, இலைசுருட்டுப்புழு, கதிர் நாவாய் பூச்சி, ஆனைக்கொம்பன் மற்றும் புகையான் தாக்குதல் மற்றும் அதனை கட்டுபடுத்தும் முறைகள் பற்றியும் நெற்பயிரை தாக்கும் நோய்களான வேரழுகல், குலைநோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய் தாக்குதல் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இனக்கவர்ச்சி பொறி, விளக்கு பொறி பயன்படுத்தும் முறைகள் பற்றியும்  விளக்கமளித்தார்.

வேளாண்மை அலுவலர் ஸ்வர்ணா நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு தேவையான ஆவணங்களான போட்டோ, கணிணி சிட்டா, நில வரைபடம், அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறு குறு விவசாயி சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் வழங்கி பயன்பெறுமாறு விவசாயிகளிடம் விளக்கிக் கூறினார். பயிற்சியின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தஜோதி நன்றி கூறினார்.

இப்பயிற்சியில் சம்மட்டிவிடுதி சார்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கமலி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல் செய்திருந்தனர். 

Tags:    

Similar News