நவீனஅரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை அரசு கைவிடவேண்டும்: ஏஐடியுசி கோரிக்கை

நவீன அரிசி ஆலைகள் முறையாக செயல்படும் நிலையில் கடந்த கால நஷ்டத்தை காரணம் காட்டி தனியாருக்கு விடப்படுகிறது

Update: 2022-03-07 09:15 GMT

அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்! நியாய விலைக் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முடிவையும் கைவிட வேண்டும்!!தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 23 நவீன அரிசி ஆலைகள் தமிழ்நாடு முழுதும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முதற்கட்டமாக சித்தர்காடு,சிதம்பரம், எருக்கூர் 1&2 ஆகிய நான்கு நவீன அரிசி ஆலைகள் தனியாருக்கு விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நவீன அரிசி ஆலைகள் முறையாக செயல்படும் நிலையில் கடந்த கால நஷ்டத்தை காரணம் காட்டி தனியாருக்கு விடப்படுகிறது.

தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்றன தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  தலைமை யிலானஅரசு பொதுத்துறையை பாதுகாக்க, பொதுத் துறையின் பயன்பாடு முழுமையாக மக்களை சென்றடையும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளையும் லாபகரமாக இயங்க வைக்க முடியும். இந்நிலையில் அரசுக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு முடிவு எடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசினுடைய பொதுத் துறையை தனியாருக்கு விற்கும் முடிவுகளை எதிர்த்து எல்பி எஃப், ஏஐடியூசி, சிஐடியு, ஏஐசிசிடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தியா முழுதும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் முற்போக்கான செயல்பாடு உள்ள தமிழ்நாடு அரசு, அரசுக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலையை தனியாருக்கு விடுவது வருந்ததக்கது.இந்த முடிவை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்.

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற 1464 நியாயவிலைக் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றுவதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மூலமாக செயல்படுத்தப்படுகின்ற பொது வினியோக முறையை விட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் பொது வினியோகம் சிறப்பாகவும் நேரடியாக மக்களை சென்றடையும். விதத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு பொறுப்பை தட்டிக் கழிக்கின்ற வகையில் கூட்டுறவு துறைக்கு மாற்றுவது சரியல்ல.

பொது விநியோக முறையை வலுப்படுத்தவும்,ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக உள்ள பொது வினியோக முறையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அதனை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் ஒரே நிறுவனத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் செயல்படச் செய்யும் விதத்தில் அனைத்து நியாயவிலை கடைகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் கொண்டுவந்து சிறப்பாக செயல்படுத்தி இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொதுவிநியோக முறை தமிழகத்தில் செயல்படுத்தப் படுகின்ற வகையில் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

மேற்கண்ட முடிவால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயமும், கொள்முதல் பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகின்ற நிலையும் உருவாகி உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சி.சந்திரகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News