சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்

மோகனூர் அருகே, சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக் கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-13 04:45 GMT

மோகனூர் அருகே, சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக்கோரி, பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே,  மணப்பள்ளி பஞ்சாயத்தில்,   குன்னிபாளையம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மணல் குவாரி செயல்பட்டது. இந்த குவாரிக்கு ஏராளமான லாரி உள்ளிட்ட வாகனங்கள் குன்னிபாளையம் வழியாகச் சென்று வந்தன. இதனால் குன்னிபாளையம் பகுதியில், ரோடுகள் கடுமையாக சேதமடைந்தன.

குண்டும் குழியுமாக காணப்பட்ட ரோடு, தற்போது பெய்த மழையால் கற்கள் பெயர்ந்து, மேடும் பள்ளமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையொட்டி, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், சேறும் சகதியுமாக மாறிய ரோட்டை சீரமைக்கக் கோரி,  நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கோவில் முன்பு,  ரோட்டில் தேங்கி நின்ற மழை நீரில்,  திரளான பெண்கள் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags:    

Similar News