நாமக்கல்: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வாட்ஸ் அப் எண் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-05-10 07:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 94861 11098 என்ற வாட்ஸ் அப் நம்பரை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இனங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு விதமான பெண் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் வளரினம் பருவத்தினரிடையே ஏற்பட்டுள்ள முரண்பட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தவும் பல திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.

முதல் செயல்பாடாக,  குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர், குழந்தை கடத்தல், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தல், தெருவோர குழந்தைகள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தல் என்று ஆங்கங்கே நடைபெறும் பிரச்சனைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக, 94861 11098 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிற்கு பொதுமக்கள் தங்களது வாட்ஸ் அப்பில்,  எச்ஐ என்று மெசேஜ் அனுப்பினால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அவர்களை தொடர்பு கொண்டு,  குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சரியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நம்பருக்கு வரும் தகவல்கள் அனைத்தும் ரகசியம் பாதுகாக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும், தங்களது செல்போனில் இந்த வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்து கொண்டு, தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகள் எதுவாயினும் உங்களின் கவனத்திற்கு வரும்போது, உடனடியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News