ஆயுத பூஜையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புதுப்பித்த வெள்ளிக்கவசம் அணிவிப்பு

ஆயுத பூஜையையொட்டி, நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு புதுப்பித்த வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

Update: 2021-10-14 11:30 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஆயுதபூஜை நாளில் புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாமக்கல் நகரில் புராண சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் கம்பீரத் தோற்றத்தில் சுவாமி நின்று வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் ஆஞ்சநேயரை தரிசிக்க தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு முன் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் தயார் செய்யப்பட்டது. இது அவ்வப்போது சாமிக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பல ஆண்டுகள் ஆனதால் அந்த வெள்ளிக்கவசம், பழுதடைந்து, ஒளி மங்கி காணப்பட்டது. அறநிலையத்துறை அனுமதியுடன் அதை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு தனியார் நிறுவனத்தின் நன்கொடை உதவியுடன் சேலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் நாமக்கல் வந்து, கோயில் வளாகத்திலே÷யை 3 நாட்களாக வெள்ளிக்கவசத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டனர். பளபளப்பாக புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம் தயார் ஆனது.

இதைத்தொடர்ந்து இன்று நவராத்திரி 8ம் நாள் மற்றும் ஆயுதபூஜையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காலை 11 மணியளவில் சுவாமிக்கு புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதணை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News