நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: மரூர்பட்டி மக்களுக்கு குடிநீர் விநியோகம்

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக மரூர்பட்டி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

Update: 2024-04-15 10:01 GMT

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக மரூர்ப்பட்டி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் துவங்கியது.

நாமக்கல் மாவட்ட கலெக்டரின் உடனடி நடவடிக்கையால், மரூர்ப்பட்டி கிராமப் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மரூர்ப்பட்டி கிராமத்தில் உள்ள ஆதி ஆதிதிரவிடர் காலனியில், 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு போர்வெல் மூலமும், காவிரி குடிநீர் திட்டம் மூலமும், கடந்த 2 ஆண்டுகளாக, வாரத்தில் 3 நாட்கள், தினசரி 10 நிமிடம் மட்டுமே கடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த, 2 மாதமாக காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டது. போர்வெல் தண்ணீரும் சொற்ப அளவிலேயே வந்ததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர், இது குறித்து, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டபோது, போர்வெல் கிணற்றில் தண்ணீர் இல்லை. இது தொடர்பாக, பி.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்று புகார் தெரிவிக்கவேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஆவேசம் அடைந்த அப்பகுதி பெண்கள், கடந்த 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மரூர்பட்டியில், காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்மந்தமான செய்தி நேற்று மாலை 4 மணியளவில் நேட்டிவ் நியூஸ் செய்தித்தளத்தில் பிரசுரம் ஆனது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உமா உத்தரவின்பேரில், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பிடிஓ பிரபாகர் மற்றும் அதிகாரிகள் மரூர்ப்பட்டிக்கு நேரில் சென்று, பஞ்சாயத்து நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், ஆதி திராவிடர் காலனியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மாலை 5 மணிக்கு மரூர்ப்பட்டி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டரின் உடனடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். நேட்டிவ் நியூஸ் இணைய செய்தி தளத்திற்கும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News