நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு முகாம்

Update: 2022-10-02 00:15 GMT

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, கேரள விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமில், மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, கேரள விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மரவள்ளி சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பூட்டுதல் என்ற தலைப்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன் பங்கேற்று, மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த, 2 ஆண்டுகளாக தோட்டக்கலை துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி மோகன், மரவள்ளியில் மேம்படுத்தப்பட்ட ரகங்கள் என்ற தலைப்பிலும், முதன்மை விஞ்ஞானி முத்துராஜ், மரவள்ளி விதைக்கரணை உற்பத்தி மற்றும் விதைக்கரணை நேர்த்தி செய்தல் என்ற தலைப்பிலும் பேசினர்.

பேராசிரியர் கிருஷ்ணகுமார், மரவள்ளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் பேசினர். மரவள்ளி உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரை உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

தொடர்ந்து, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மாவுப்பூச்சி ஒட்டுண்ணி தயாரிக்கும் ஆய்வுக்கூடம், மாவுப்பூச்சி எதிர்ப்பு திறனுடைய ஸ்ரீ ரக்ஷா நடவு செய்யப்பட்டுள்ள திடலையும் பார்வையிட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், பச்சுடையாம்பாளையம், காரைக்குறிச்சி மற்றும் ஈச்சம்பட்டி கிராமங்களுக்கு சென்ற விஞ்ஞானிகள், மரவள்ளி சாகுபடி செய்துள்ள வயலை பார்வையிட்டனர். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர்கள் சத்யா, பால்பாண்டி, முத்துசாமி, சங்கர், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News