ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.;
பைல் படம்
நாமக்கல்,
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை டி.எஸ்.பி., ராஜபாண்டியன் மேற்பார்வையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 7 ம் தேதி, வெண்ணந்தூர் அடுத்த மதியம்பட்டி கரிபெருமாள் கோவில் அருகே, எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில், 1,610 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி கூத்தங்காட்டை சேர்ந்த கோபால் (49) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி சரவணன், கோபாலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்ற கலெக்டர் உமா, கோபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, இன்ஸ்பெக்டர் (பொ) சுதா, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோபாலை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார். தொடர்ந்து கோபால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.