குப்பைகள், கோழிக்கழிவுகள் எரிப்பதால் மக்கள் அவதி

சாலையோரம் கோழிக்கழிவுகள் எரிப்பதால் ஏற்படும் துர்நாற்றம், புகைமூட்டத்தால் மக்கள் சிரமபடுகின்றனர்;

Update: 2025-04-19 10:50 GMT

குப்பைகள், கோழிக்கழிவுகள் எரிப்பதால் மக்கள் அவதி

மோகனூர் பகுதியில் சாலையோரம் கோழிக்கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் கொட்டி குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருவது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மோகனூர்–வாங்கல் சாலையில் செங்கத்துறை அருகே உள்ள உயர்மட்ட பாலம் மற்றும் வாய்க்கால் பாலம் பகுதியிலேயே இந்தச் செயற்பாடுகள் நடைபெறுவதால், அவ்வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் புகைமூட்டத்தால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் தடுமாற்றம் போன்ற சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். மேலும், குப்பையை எரிக்கும் போது உருவாகும் புகை சாலையை மூடியபடி காணப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த நிலையால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்திலும் புகைமூட்டத்திலும் நாள் முழுவதும் தவித்து வருகின்றனர். மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகளிலும் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற நிலையில், பஞ்சாயத்தால் ஒதுக்கப்பட்ட பேட்டப்பாளையம் பகுதியில் குப்பை கொட்டப்பட வேண்டியதாயினும், தற்போது சாலையோரமாகவே கொட்டி எரிக்கப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடும், பாதுகாப்பு பிரச்சனைகளும் உருவாகி வருகின்றன. இது தொடர்பாகப் பலமுறை புகார் கொடுத்தும், நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரம் கொட்டும் செயலை தடுக்கவும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது.

Tags:    

Similar News