கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க கமிஷனரிடம் விவசாயிகள் கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம் வழங்க வேண்டும் என்று, சர்க்கரைத்துறை கமிஷனரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-02-16 02:45 GMT

பைல் படம்

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம் வழங்க வேண்டும் என்று, சர்க்கரைத்துறை கமிஷனரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், தமிழக சர்க்கரைத்துறை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் குப்புதுரை, பொருளாளர் வரதராஜன் ஆகியோர், சர்க்கரைத் துறை கமிஷனர் விஜயகுமாரிடம்  மனு அளித்தனர்.

அதில், நடப்பு அரவை பருவத்தில், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு, கரும்புக்கான தொøயை முழுமையாக வழங்காமல் ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், தமிழக அரசிடம், வழிவகைக் கடன் பெற்றுக்கொடுத்து, விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை, லாபத்தில் கொண்டுவர மொளாசஸில் இருந்து எத்தனால் தயாரிக்க, 2023–24ம் அரவை பருவத்தில், எரிசாராய ஆலையை நவீனப்படுத்தி, எத்தனால் உற்பத்தியை விரைந்து துவக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000, நடவு மானியமாக, ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். ஆலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணை மின் திட்டப்பணியை விரைந்து முடித்து, 2023–24ம் ஆண்டு அரவைப் பருவத்தில் மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையின் எரிசாராய ஆலை மூலம் கடலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்ட சேனிடைசருக்கு ரூ. 18 லட்சம் பாக்கி வரவேண்டியுள்ளது. அவற்றை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுடன், எவ்வித ஆவணமும் இன்றி கடனாக வழங்கிய ஆலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News