நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற விதைப்பரிசோதனை அவசியம்

நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெறுதற்கு, விதை பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-21 04:30 GMT

நிலக்கடலை பயிர் - கோப்புப்படம் 

நாமக்கல், விதை பரிசோனை நிலைய வேளாண் அலுவலர் சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல், விதைப்பரிசோதனை நிலையம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், நிலக்கடலை விதையின் தரத்தை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும். சாகுபடியில் அதிக விளைச்சலை பெற, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி, நிலக்கடலையின் முளைப்புத்திறன் 70 சதவீதம், ஈரப்பதம் 9 சதவீதம் மற்றும் புறத்தூய்மை 96 சதவீதம் என, நிர்ணயிக்கப்படுகிறது.

ஈரப்பதம் அதிகம் இருந்தால், பூச்சி மற்றும் பூஞ்சான் தாக்குதலால் பாதிக்கப்படுவதுடன், முளைப்புத்திறனும் பாதிக்கும். அதனால், விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதைப்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.

விதை பரிசோதனை செய்வதற்கு, 500 கிராம் அளவில், நிலக்கடலையை, நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாக கட்டிடத்தில், இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில், குறைந்த கட்டணத்தில், ஒரு மாதிரிக்கு ரூ. 80 செலுத்தி, புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவற்றை பரிசோதனை செய்துகொள்ளலாம். விவசாயிகள் இதன் மூலம் தரமான விதைகளை உபயோகித்து அதிக மகசூல் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News