இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை

இராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-01-16 14:15 GMT

தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ரகுநாதன் கோரிக்கை குறித்து விளக்கினார். கூட்டத்தில், திருச்செங்கோடு தாலுக்காவில் உள்ள மல்லசமுத்திரம், வையப்பமலை குறு வட்டங்கள் மற்றும் ராசிபுரம் தாலுக்காவில் உள்ள வெண்ணந்தூர் குறு வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி, மல்லசமுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுக்கா அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், புதிய தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 தாலுக்கா உள்ளன. இந்த நிலையில் 2 வருவாய் கோட்டங்கள் மட்டுமே உள்ளன. எனவே, பொதுமக்களின் நன்மை கருதியும், நிர்வாக வசதிக்காகவும், ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருவாய் நிர்வாகத்தில், கிராமத்தின் அடிப்படை பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்கள், 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. நிர்வாக நலன் கருதி, கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க மாவட்ட துணை தலைவர்கள் அரவிந்தன், அம்ஜத், பொருளாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News