நாமக்கல்: இன்று தடுப்பூசி போட்டால் தங்கக்காசு, பரிசுகள் வெல்ல வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கக்காசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

Update: 2021-10-23 01:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 5 ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழக சுகாதாரத்துறை அறிவுரையின் பேரில் 6ம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று 23ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. மது அருந்துபவர்கள் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்கள் உட்பட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முகாம் சனிக்கிழமையில் நடத்தப்படுகிறது.

முகாமை முன்னிட்டு,  நாமக்கல் மாவட்டவருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், சமூக சேவை சங்கங்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில் தடுப்பூசி போடுவோரை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு பரிசுப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி இன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், நடமாடும் வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 750க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், நாமக்கல் ரோட்டரி சங்கம், நாமக்கல் கான்ட்ராக்டர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக, நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News