நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமை

நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Update: 2021-10-18 09:30 GMT

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயாசிங் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் கேரளாவில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக்காக அவர் கேரளா சென்றுவிட்டுத் திரும்பினார். அவருக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்று முடிவில் தெரியவந்தது. இருப்பினும் சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார். கடந்த சில வாரங்களாக உள்ளாட்சி இடைத்தேர்தல் சம்பந்தமாகவும், கொரோனt தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்கள், மக்கள் குறைதீர் முகாம், அரசுப் பணிகள் ஆய்வு என்று பல அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக டிஆர்ஓ துர்கா மூர்த்தி கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News