நாமக்கல்லில் வங்கி சேவை சிறப்பு விழிப்புணர்வு முகாம்: ரூ.101 கோடி கடனுதவி

நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வங்கி வாடிக்கையாளர் சேவை சிறப்பு முகாமில், 1054 பேருக்கு ரூ.101 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

Update: 2021-10-22 03:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வங்கி வாடிக்கையாளர் சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில், அனைவருக்கும் வங்கி சேவை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. முகாமில், 20-க்கும் மேற்பட்ட வங்கிகள், சார்பில் 42 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி முகாமை திறந்து வைத்து கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலக சிறு, குறுந்தொழில் கடன் பிரிவு பொது மேலாளர் சுதாகர் ராவ் பேசினார்.

அப்போது, கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் நெருக்கடியை தீர்க்கவும், நலிவடைந்த தொழிலை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் உத்தரவின்பேரில் இதுபோன்ற நேரடி மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சிறு, குறுந்தொழிலுக்கு புத்துயிர் ஊட்டப்படுகிறது. பிரதமரின் ஆத்ம நிர்பயா திட்டத்தின் கீழ் கொரோனா காலக் கடன்கள் வங்கிகள் மூலம் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளின் சார்பில் சுமார் ரூ. 2.50 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் கடன்கள் வழங்க ஆர்வமாக உள்ளனர். கொரோனா கால சிறப்பு கடன் உதவிகளை பெறுபவர்கள் உரிய காலத்தில் வட்டியும், அதனைத் தொடர்ந்து கடன்களையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால்தான் தொடர்ந்து கடன் வழங்க முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் 1,054 பயனாளிகளுக்கு ரூ. 101 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன. திரளான வங்கி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News